தமிழக செய்திகள்

ரூ.446 கோடி ஒப்பந்தம்.. சென்னையில் 12 மாடி கட்டிடம் உள்ளே நுழைந்து செல்லும் மெட்ரோ ரெயில்

வணிக வளாகம் சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

சென்னையில் ல் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றின் ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகம் வழியாக மெட்ரோ ரெயில்

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் திருமங்கலம் பகுதியில் சுமார் 3.85 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் அமைகிறது.

இந்தக் கட்டுமானம் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக வடிவம் பெறும்.

இத்திட்டத்தில் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம் நான்கு கோபுரங்களுடன் கூடிய வணிக வளாகம் சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தின் நான்காவது முதல் ஆறாவது தளங்களுக்கு இடையிலான உயரத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்கள் நேரடியாக கடந்து செல்லும்.

கட்டிடத்திற்குள்ளேயே மெட்ரோ ரெயில் நிலையம், கார்ப்பரேட் அலுவலகங்கள், வணிகக் கடைகள் மற்றும் மூன்று அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

புதிதாக அமையும் இந்த உயர்மட்ட மெட்ரோ நிலையமும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திருமங்கலம் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையமும் நடைமேம்பாலம் மூலம் இணைக்கப்படும்.

ஒப்பந்தம்

சுமார் ரூ. 446.88 கோடி மதிப்பீட்டில் இக்கட்டிடத்தை கட்டும் ஒப்பந்தத்தை கெப்பாசிட்டி இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் வென்றுள்ளது.

திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT