தமிழக செய்திகள்

சென்னை பாரிமுனையில் ஹெல்மெட்டால் தலையில் தாக்கி ரூ.36 லட்சம் பறிப்பு

குடோன் தெரு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே இறங்கி கந்தன், கணேசன் இருவரையும் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் மற்றும் கத்தியால் தாக்கியதில் கந்தன், கணேசன் இருவரும் நிலைகுலைந்தனர். அப்போது ரூ.36 லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு 4 கொள்ளை யர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சென்னை பூக்கடை வரத முத்தயப்பா தெருவில் சோப்பு, ஷாம்பு விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கந்தன், கணேசன் ஆகிய இருவர் வேலை செய்து வருகிறார்கள்.

வங்கிக்கு

இவர்கள் கடையில் விற்பனையான ரூ.36 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து பாரிமுனை குடோன் தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு கொண்டு சென்றனர்.

நடந்து சென்ற இருவரையும் 4 மர்ம நபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். குடோன் தெரு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே இறங்கி கந்தன், கணேசன் இருவரையும் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

தாக்குதல்

ஹெல்மெட் மற்றும் கத்தியால் தாக்கியதில் கந்தன், கணேசன் இருவரும் நிலைகுலைந்தனர். அப்போது ரூ.36 லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு 4 கொள்ளை யர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். குடோன் தெருவில் இருந்து என்.சி.போஸ் சாலை வழியாக கொள்ளையர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

பின்னணியில் யார்?

இது பற்றி தகவல் கிடைத்ததும் பூக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். காயமடைந்த கந்தன், கணேசன் இருவரும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்தன், கணேசன் இருவரும் கடையில் இருந்து ரூ.36 லட்சம் பணத்தை எடுத்துச் செல்வதை முன் கூட்டியே அறிந்து கொண்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

போலீசார்

இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ரூ.36 லட்சம் பணத்தை அஜாக்கிரதையாக எந்தவித பாதுகாப்பும் இன்றி எடுத்துச் சென்றது ஏன்? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT