நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு உயர்ரக போதைப்பொருட்கள் (மெத்தபெட்டமைன்) கடத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுகன் (வயது 27) என்பவரது வீட்டில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சுகன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இந்த கடத்தலுக்கு மூளையாக தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான பூபாலன் (42) செயல்பட்டதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 8 அதிகாரிகள் வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்த பூபாலன் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுகன் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருவதும், பூபாலனின் மனைவி பிரேமியா இலங்கையை சேர்ந்தவர் என்பதும், இதனால் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பூபாலன் நண்பர்கள் மூலம் போதை பொருட்களை பல ஆண்டுகளாக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து பூபாலன், சுகன், அவரது சகோதரர் மணிகண்டன் (29) மற்றும் சதீஷ் (30) ஆகிய 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 135 கிலோ எடையுள்ள மெத்த பெட்டமைனை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.270 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தினர். சர்வதேச கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பன குறித்தும் துருவித் துருவித் கேள்ளி எழுப்பினர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 4 பேரையும் இன்று (சனிக்கிழமை) தஞ்சாவூரில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை அண்மையில் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பூபாலன், சுகன் ஆகியோர் தொடர்பு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, 2 பேரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து படகையும், அதற்கு காரைக்காலில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான ஹை ஸ்பீடு என்ஜீனையும், வாங்கி சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
அதன் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். கனடா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டு கைதான வக்கீல் பூபாலன் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்து கைது செய்யப்பட்டவர்களுக்காக மட்டும் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்துள்ளார். இது அவருக்கு இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த பூபாலன், அக்கட்சியில் இருந்து விலகியதும், பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்துள்ளர். இதனையடுத்து பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக த.வெ.க. நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.