நாகையில் இருந்து இலங்கைக்கு ரூ. 270 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் இருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வேளாங்கண்ணியில் விடுதி நடத்தி வரும் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுகநாதன் (வயது 27) என்பவர் வீட்டுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் சென்று சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் சுகநாதன் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 5 கிலோ அடங்கிய 27 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 270 கோடிக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தாமணி ஊராட்சியைச் சேர்ந்த த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான பூபாலன் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஒரு குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில் பூபாலன், சுகநாதன் உள்ளிட்டோர் இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு சுகநாதனின் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் (29), நண்பர் சதீஷ் (30) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து த.வெ.க. பிரமுகர் பூபாலன், சுகநாதன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
கைதான 4 பேரிடமும் இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் 2-வது நாளாக அவர்களிடம் விசாரணை நீடித்தது. 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் த.வெ.க. நிர்வாகி பூபாலன், விடுதி உரிமையாளர் சுகநாதன் ஆகியோருடன் செல்போனில் தொடர்பில் இருந்த 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதேபோல் கைதான பூபாலனிடம், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.