ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டசபையின் கடைசி நாள் இன்று. நேற்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்தன.
அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது, "சட்டப்சபையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டுவந்தோம்.
தமிழ்நாடு சட்டசபை விதிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மற்றும் இன்றைய எம்எல்ஏ எவ வேலு 2021 - 2026 ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது 14.1.2026 நாளிட்ட அரசாணை எண் 06 மூலம் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026-27 இல் மொத்த திட்ட அனுமதிக்குள் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நேரத்தில் அந்த மானிய கோரிக்கைக்கள் சட்டசபையில் அப்போது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் புரொவிஷன் மீது ரூ.2000 கோடி காமிட்ட் லயபிலிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது.
சட்டமன்றத்தில் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ. 2000 கோடியை ஒதுக்கியுளளனர்.
இதனால் மானிய கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரம் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்பற்ற செயல் குறித்த அறிக்கையை ஆய்வக்கு சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என கோருகிறேன்" என தெரிவித்தார்.