தமிழக செய்திகள்

சிவகங்கை அருகே அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.11½ லட்சம் வழிப்பறி: ஊழியர் உள்பட 7 பேர் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்ற சுமதி என்பவர் நடத்தி வரும் அடகு கடைக்குச் சொந்தமான பணம் வழிப்பறி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-சிவகங்கை புறவழிச்சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்த ரூ.11.5 லட்சம் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 7 பேரை திருக்கோஷ்டியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.11 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்ற சுமதி என்பவர் நடத்தி வரும் அடகு கடைக்குச் சொந்தமான பணம் வழிப்பறி செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அடகு கடை ஊழியர் முத்தையா (55), அவரது மகள் முத்துலட்சுமி (25), அவரது தோழி பரமேஸ்வரி (32), மற்றும் ஆனேஷ் (27), புகழேந்தி (26), தினேஷ் (25), சுண்டு (எ) நாச்சிமுத்து (23) என்று தெரியவந்துள்ளது.

ரூ.11.5 லட்சம் வழிப்பறி

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், முத்தையாவின் மகள் முத்துலட்சுமியும் அவரது தோழி பரமேஸ்வரியும் இந்த கொள்ளைக்கான திட்டத்தைத் தீட்டி, மற்ற நபர்களின் உதவியுடன் அதை அரங்கேற்றியது தெரிய வந்தது. முத்தையாவிடமிருந்து ரூ.11.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் உள்ள சரஸ்வதியின் கணவருக்குத் தகவல் தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் முத்தையாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். புகார் அளித்த சரஸ்வதியிடமிருந்து பணத்தைப் பெற்று வந்ததாக அவர் கூறியபோதும், நடந்த சம்பவங்கள் எதுவும் சரஸ்வதிக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

அதன் பின்னரே தனது கடை ஊழியருக்கே இதில் தொடர்பு இருப்பது அவருக்குத் தெரியவந்தது. இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT