தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மோசடி: முன்ஜாமின் கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர் முத்துக்குமார் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முத்துக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சில தவறான தகவல்கள் உள்ளதால் அதனை மாற்றி புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், அதற்கு ஏதுவாக மனுவை வாபஸ் பெறுவதாக கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்ததோடு, புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

வழக்கு பின்னணி

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகளை பெற்று தருவதற்கு ரூ.100 கோடி லஞ்சம் பெற்று, அதனை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் குற்றவாளியாக சங்கத்தின் பொருளாளரான முத்துக்குமார் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், வழக்கில் கைதாவதைத் தவிர்ப்பதற்காக முத்துக்குமார் தலைமறைவாக உள்ளதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் , இதுவரை 47 பள்ளிகளின் நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், சுமார் ஆயிரம் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், எனவே மனுதாரரை காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் முன்ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் கோரிக்கையை ஏற்றுகொண்ட சென்னை உயர் நீதிமன்றம் முத்துக்குமாரின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து முத்துக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

SCROLL FOR NEXT