தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

திமுக ஆட்சி

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ்

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை ஐகோர்ட்

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கில் திருச்சி, சென்னையில் மனுதாரருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீசார் ஆவணங்களைக் கைப்பற்றினர். தற்போது பத்து ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி, 7 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான மனுதாரர் எங்கும் தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ மாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும், போலீசார் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

முன்ஜாமின்

போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், முத்துகுமாரை மனுதாரர்தான் பாதுகாக்கிறார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே, முன்பிணை வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

மனு தள்ளுபடி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை வழங்கினார். அதில் அன்பில் மகேசுக்கு முன்ஜாமின் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்பிணை கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT