தமிழக செய்திகள்

ஒரகடத்தில் டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை வழக்கில் கார் டிரைவரிடம் தீவிர விசாரணை

கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புறநகர் டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை வழக்கில், கார் டிரைவர் அபீப்யிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பணத்தை பாதுகாப்பின்றி காரில் விட்டு சென்றது தொடர்பாக போலீசார் சந்தேகங்களை எழுப்பி, விசாரணை முடிவில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் பணத்தை வங்கி ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வங்கி ஏஜெண்ட் தாஸ் மற்றும் டிரைவர் அபீப் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் 22 கடைகளில் வசூல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரகடம் மதுபான கடையில் வசூல் செய்வதற்காக சென்றுள்ளனர். ஒரகடம் கடையில் தாஸ் பணத்தை வாங்குவதற்காக கடைக்குள் சென்ற நிலையில், ஓட்டுநர் மட்டும் காரில் இருந்துள்ளார். அப்போது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வேகமாக வந்து கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

கொள்ளை

இதனால் ஓட்டுநருக்கும் அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 3-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், வசூல் பணத்துடன் காரையே கடத்திச் சென்றனர். பின்னர் படப்பை அருகே காரணிதாங்கலில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அதிலிருந்த ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பரண்டு கீர்த்திவாசன் ஒரகடம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் காரனைதாங்கள் பகுதியில் காணப்பட்ட காரை மீட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கார் டிரைவர் அபிப்யிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1.50 கோடி பணம் காரில் இருக்கும் போது பணத்தை எந்த பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே காரில் விட்டு விட்டு காரில் இருந்து இறங்கி ஓடியது ஏன்? கார் சாவியை காரிலியே விட்டு விட்டு இறங்கி ஓடியது ஏன்? என போலீசாருக்கு பல சந்தேககள் எழுந்து உள்ளது. விசாரணை முடிவில் பல திடிக்கிடும் தகவல் வெளியாகும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT