தமிழக செய்திகள்

ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் கைது

போலீசார் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜன். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

வெட்டிக்கொலை

இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது, வெறிச்செயலில் ஈடுபட்டது அவரின் 6 நண்பர்கள் என்பதும், அவர்கள் அனைவரும் ஏற்கனவே 2017-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தை ஒன்றாக சேர்ந்து நிகழ்த்தி இருந்தததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாநகரின் விரிவாக்க பகுதியில் ஓரிடத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்த லிங்கம்(வயது 25), மகாராஜன்(28) ஆகியோர் தப்பிச்செல்ல முயன்றனர்.

2 பேருக்கு கைமுறிவு

அப்போது அவர்கள் தவறி விழுந்ததில் அவர்களின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களை கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய எம்.கே.பி. நகர் திருமலை தெருவை சேர்ந்த மான் செல்வக்குமார் (40) என்பவரையும் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி கொலை வழக்கின் முக்கிய கொலையாளிகளான பாளை வி.எம்.சத்திரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் வசித்து வரும் பட்டாணி என்ற மாரிமுத்து(32), தாழையூத்து காமராஜர் தெருவை சேர்ந்த சுபாஷ்(32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடையதாக கூறி மாரிமுத்துவின் 15 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

தொடர்ந்து மாரிமுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சாலமான் உள்பட நாங்கள் 6 பேரும் நண்பர்கள் தான். அனைவரும் சேர்ந்து ஒரு கொலை சம்பவத்தை கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்த்தினோம். அதன்பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நிலையில், சாலமான் மேலும் 2 கொலைகளை செய்து விட்டார். இதனால் அவர் தன்னை பெரிய ரவுடி என்று அடையாளப்படுத்தி கொண்டார். இது எங்களுக்கு பிடிக்கவில்லை.

போலீசார்

ஆனாலும் அவருடன் நட்புடன் பழகி வந்த நிலையில், அவர் தன்னை டான் போல காட்டிக் கொண்டதோடு, வழக்கு செலவுக்காக அடிக்கடி எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். கடந்த ஆண்டு என்னை பாளை தாலுகா போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். மேலும் என் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதற்கு காரணம் சாலமன் தான் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த சாலமன் சாம் பிரபாகரை நிரந்தரமாக தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

இதனால் லிங்கம், மகாராஜன், செல்வகுமார், சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டம் தீட்டினேன். அதன்படி சம்பவத்தன்று ஆட்கள் யாரும் வருகிறார்களா என்பதை நோட்டமிட எனது மகனை ஒரு தெருவின் ஒரு மூலையிலும், செல்வகுமாரை மற்றொரு மூலையிலும் நிறுத்திவிட்டு நான், சுபாஷ், லிங்கம், மகாராஜன் ஆகிய 4 பேரும் சென்று சாலமனை தீர்த்துக்கட்டினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை பதிவு செய்து கொண்ட போலீசார் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT