தமிழக செய்திகள்

தாம்பரம் அருகே பிடிக்க முயன்றபோது போலீஸ்காரரை வெட்டி தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு

சதாம் உசேன் மீது பிடி ஆணை நிலுவையில் உள்ளதால் அவரை கைது செய்ய தாம்பரம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

தாம்பரம் மணிமங்கலம் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சதாம் உசேன்(29). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ரகசிய தகவல்

சதாம் உசேன் மீது பிடி ஆணை நிலுவையில் உள்ளதால் அவரை கைது செய்ய தாம்பரம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மணிமங்கலம் அருகே கரசங்கால் காட்டுப்பகுதியில் ரவுடி முகமது சதாம் உசேன் தனது கூட்டாளியான பல்லாவரம் தொண்டை சரவணன் என்பவருடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து ரவுடி முகமதுசதாம்உசேன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

தப்பி ஓட முயற்சி

அப்போது கரசங்கால் காப்பு காட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரவுடி முகமது சதாம் உசேன் தெரிவித்தார். இதையடுத்து இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன், காவலர் சதீஷ் மற்றும் போலீசார் ரவுடி முகமது சதாம் உசேனை அவர் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென காவலர் சதீஷின் கையை வெட்டி விட்டு முகமது சதாம் உசேன் தப்பி ஓட முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி சதாம் உசைனின் இடது கால் முட்டியின் கீழ் ஒரு ரவுண்டு சுட்டார்.

சிகிச்சை

இதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் முகமது சதாம் உசேன் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தி வெட்டில் காயம் அடைந்த காவலர் சதீசும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சம்பவ இடத்தில் ரவுடி பதுக்கி வைத்திருந்த 4 பட்டாக்கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT