பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் ஆண்டுதோறும் விரிவான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இதையடுத்து ரோப்கார் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்கள் கழற்றப்பட்டு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் விரைவாக மலைக்கோவிலுக்கு சென்றடைவதுடன், இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்ய முடிவதால் குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் ரோப்கார் சேவையை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் ஆண்டுதோறும் விரிவான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இதையடுத்து ரோப்கார் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதிரிபாகங்கள் கழற்றப்பட்டு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கொல்கத்தாவில் இருந்து புதிய சாப்ட் மற்றும் கியர்பாக்ஸ் வரவழைக்கப்பட்டு ரோப்காரில் பொருத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கரூரில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட ரோப்கார் பெட்டிகள் பழனிக்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டன.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரோப்காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனையின்போது ஒவ்வொரு பெட்டியிலும் தலா 250 கிலோ எடையுள்ள கற்கள் வைக்கப்பட்டு ரோப்கார் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை கோவில் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வல்லுநர் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பழனி ரோப்கார் சேவை இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.