தமிழக செய்திகள்

மூலப்பொருட்கள், லாரி வாடகை உயர்வு - சிவகாசியில் பட்டாசு விலை 30 சதவீதம் அதிகரிக்கிறது

ஆர்டர் கொடுத்த விலைகளுக்கு பட்டாசுகளை கொடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு தயாரிப்புகளில் பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய மற்றும் சிறியளவில் 1100 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கடந்தாண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் வட மாநிலங்களில் தேவைக்காக ஆலைகளில் உடனடியாக பட்டாசு தயாரிப்பு முழுவீச்சில் நடைபெற்றது.

ஆனால் எதிர்பார்த்த அளவு வடமாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வரவில்லை. இதனால் ஆடைகளில் பட்டாசு ரகங்கள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்தனர்.

இந்த நிலையில் மேற்காசிய போரால் பட்டாசு உற்பத்திக்கான மூல பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு 50 கிலோ மூட்டை சல்பர் ரூ.2800-க்கும் விற்பனையானது. தற்போது ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. ரூ.90க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெடி உப்பு ரூ.156 ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.450-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அலுமினியம் பவுடர் ரூ.600 ஆக விலை உயர்ந்துள்ளது.

இதேபோல் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு பட்டாசு ஆர்டர்களுக்கு முன்பணம் கொடுத்தவர்களுக்கு பழைய விலையிலேயே பட்டாசுகளை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் ஆலை உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.

கடந்தாண்டும், இந்தாண்டும் விலைகளை ஒப்பிடுகையில் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த விலைகளுக்கு பட்டாசுகளை கொடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பட்டாசு விலை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டு பட்டாசு உற்பத்தி பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.