அயலை மீன் எண்ணெய் தயாரிப்புக்காக விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(25-ந் தேதி) காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் புரட்டாசி மாதம் முடிந்தும், ஆயுதபூஜையை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. இருப்பினும், மீன்களின் விலை சற்று அதிகரித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான காசிமேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும். அண்டை மாநிலங்களுக்கும் மீன்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இங்கு மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் மக்கள் வரத்து குறைவாக இருந்தது.
கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கும் சிறிய ரக மீன்களே அதிகம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விசைப்படகு மீனவர் நலச்சங்க கவுரவத் தலைவர் கபிலன் கூறும்போது, "ஆயுதபூஜையை முன்னிட்டு பலர் அசைவ உணவை தவிர்த்ததால் மக்கள் கூட்டம் குறைந்து இருந்தது. இருப்பினும், கடந்த 11-ந் தேதியை விட மீன் விலை உயர்ந்தது. மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
18 கிலோ கொண்ட ஒரு கூடை சங்கரா ரூ.5,000, பாறை ரூ.5,000, இறால் ரூ.4,000, கணவா ரூ.5,000-க்கு விற்பனையானது. வஞ்சிரம் கிலோ ரூ.800-க்கும், கல் இறால் கிலோ ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அயலை மீன் எண்ணெய் தயாரிப்புக்காக விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(25-ந் தேதி) காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.