குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் நிலச்சரிவு காரணமாக தடை செய்யப்பட்ட போக்குவரத்து, சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கவுள்ளது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் கடந்த மாதம் 23-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் மற்றும் பாறைகளை அகற்றுதல், சாலை அகலப்படுத்துதல் உள்ளி ட்ட சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் தற்போது 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இச்சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினர் பர்லியார் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலையின் தற்போதைய நிலை மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பணிகள் நிறைவடைந்த பகுதியில் ஒன்றிணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் டிரோன்களை பறக்க விட்டும் அதிகாரிகள் கண்காணித்தனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் தேயிலைத் தொழில் சார்ந்தவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பர்லியார் பகுதியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தகமும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்தநிலையில், சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள செய்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பர்லியார் பகுதி மக்களின் ஒரு மாதத்திற்கும் மேலான காத்திருப்புக்கு விரைவில் விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குன்னூர் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்த மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.