சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
சென்னை மக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
ரூ.226.55 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணியை அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டிபகுதியில் தொடங்கி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையை கடந்து இந்த மேம்பாலம் அமைகிறது. 678 மீட்டர் நீளமும், 15.52 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரெயில்வே மேம்பாலம் 4 வழி பாதையாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லக்கூடிய பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இரவு பகலாக இந்த வழித்தடத்தில் நீண்ட தூரம் செல்லக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் மழைக்காலங்களில் மழை நீர் கடல் போல் தேங்கி ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்தை தடை செய்து விடுகிறது. இதனால் வடசென்னை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்துதல், மின்சாரம் மற்றும் கழிவுநீர் பாதை கட்டுதல் போன்றவற்றிற்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் திட்டம் தொடங்கிய பல மாதங்கள் ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்து வந்தன. கடந்த ஆட்சியில் எப்படியாவது இந்த பணியை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் ரெயில்வே துறையால் அது தாமதமானது. ரெயில்வே பாதை அமைந்துள்ள பகுதியை மட்டும் துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று ஒவ்வொரு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. 58 மீட்டர் நீளம் 15.2 மீட்டர் அகலம் கொண்ட ரெயில்வே பாதையின் மேலே இரும்பு கருடர்கள் மூலம் பிரம்மாண்டமான வளைவு அமைக்கப்படுகிறது.
பேசின் பாலத்தில் அமைந்துள்ள இரும்பு கர்டர்கள் போன்று இந்த மேம்பாலத்திலும் அமைக்கப்பட உள்ளன. இந்த இரும்பு கர்டர்கள் அமைக்கப்படும் பணி மட்டுமே தற்போது தாமதமாகி வருகிறது. மற்ற பணிகள் இருபுறமும் முடிக்கப்பட்டு விட்டன. 68 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை ரெயில்வே துறையின் ஒப்புதல் மூலமே செய்ய வேண்டிய இருப்பதால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
3½ ஆண்டுகளாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேதனையான விஷயமாகும். இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தினமும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
ரெயில்வே பகுதியில் நடைபெற வேண்டிய ஒவ்வொரு வேலையையும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு தொடங்க முடியும், இதுவே தாமதத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- 58 மீட்டர் நீளத்திற்கு இரும்பு கர்டர் வளைவு புதுக்கோட்டையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 4 எண்ணிக்கை கொண்ட இந்த கர்டர்கள் தயாரிக்கும் பணி முடிந்து விட்டன. அதனை ரெயில்வே அதிகாரிகள் முதல் கட்டமாக ஆய்வு செய்து விட்டனர்.
அடுத்ததாக லக்னோவில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் அந்த இரும்பு கர்டர்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அதனை சென்னைக்கு கொண்டு வர முடியும்.
மேலும் மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் அங்கு 2 கிணறுகள் தோண்டப்படுகின்றன. ஒவ்வொரு கிணறும் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும்.
மழைநீர் தேங்கினால் இந்த கிணற்றின் வழியாக கொண்டுவரப்பட்டு கால்வாய்க்குள் வெளியேற்றப்படும். மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த பிரம்மாண்ட கிணறுகள் ஆட்டுத்தொட்டி பகுதியில் அமைகிறது. இந்த 2 கிணறுகளும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.