தமிழக செய்திகள்

குமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் மலைப்பாம்புகளால் மக்கள் அச்சம்

ஒரே நாளில் 2 பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து படையெடுத்து வருகின்றன மலைப்பாம்புகள். அடர்ந்த காடுகளில் காணப்பட்ட இவை தற்போது சர்வ சாதாரணமாக நகர பகுதிகளில் உலா வருவது தான் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாமிதோப்பு பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கிய நிலையில், நேற்று முன்தினம் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய சாலையில் மற்றொரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்று பயம் காட்டியது.

இதுகுறித்த தகவல் கிடைத்து, தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும் வருவதற்குள் அந்த பாம்பு புதருக்குள் சென்று மறைந்தது. இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்தனர். இந்த சூழலில் நேற்று இரவு மேலும் 2 இடங்களில் மலைப்பாம்பு வெளிப்பட்டு மக்களின் அச்சத்தை அதிகரித்தது.

நாகர்கோவில் மேலப்பெருவிளை பிளஸ்ஸிங் தெரு குடியிருப்பு பகுதியில், வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டு இருந்த அலங்காரச் செடிகளை ரசிக்கச் சென்றவர்கள், அங்கு மலைப்பாம்பு நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 12 அடி நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இறச்சகுளம் இந்திரா காலனி குடியிருப்பு பகுதியிலும் மலைப்பாம்பு இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தீயணைப்பு மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று அதனை பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட 2 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். ஒரே நாளில் 2 பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடிக்கும் காட்சி குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தட்பவெப்ப நிலை

கடந்த சில நாட்களாக நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் உணவு தேடும் முயற்சியால் வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து மலைப்பாம்புகள் ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதர்மண்டிக் கிடக்கும் இடங்களைத் தூய்மைப்படுத்தவும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT