தமிழக செய்திகள்

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பி.ஏ.பி.அணையிலிருந்து செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டிபாளையம், கப்பிணிபாளையம், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்குக்காடு, தேவணாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், மாசநாயக்கன் புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் தென்னை மரங்கள் கருகிய நிலைக்கு வந்தது.

மேலும் மழை பெய்து இருந்தால் விவசாய நிலங்களில் விவசாயிகள் உழவு செய்து கம்பு, சோளம், நிலக்கடலை, தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, பொறியல் தட்டை, பச்சை மிளகாய் உள்பட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து இருப்பார்கள். மழை இல்லாததால் விவசாய நிலங்களை உழவு செய்யக்கூட முடியாமல் உள்ளது.

சாகுபடி

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழை எப்போது வரும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாத்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் விளைநிலங்களில் எந்தவித பயிர்வகைகளும் சாகுபடி செய்யவில்லை.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.ஏ.பி.அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT