புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சுக்கிரன் விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள 10 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தீத்தான் விடுதி பஸ் நிறுத்தம் அருகே மயானம் உள்ளது.
பல ஆண்டுகளாக அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. தனி நபரின் இடத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 90) என்ற விவசாயி மரணமடைந்தார். அவரது உடலை மயானத்திற்கு அமரர் ஊர்தி வாகனத்தில் ஏற்றி உறவினர்கள் எடுத்து சென்றனர். ஆனால் மயான பாதை இடத்தின் சொந்தக்காரர் இரும்பு கேட் அமைத்து பாதையை அடைத்து வைத்திருந்தார். இதனால் முதியவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இதையடுத்து மயானத்திற்கு பாதை கேட்டு முதியவரின் உடல் ஏற்றப்பட்ட வாகனத்துடன் அவரது உறவினர்கள் கறம்பக்குடி - திருவோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பட்டா இடத்திற்கு சொந்தக்காரர் அனுமதி மறுத்ததால் மயான பாதைக்கு முன்பாக இருந்த வரத்து வாரியில் முதியவரின் உடலை தகனம் செய்ய வருவாய்த்துறையினர் அனுமதி அளித்தனர். இதை தொடர்ந்து மயானம் அல்லாத மாற்று இடத்தில் முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயானத்திற்கு பாதை கேட்டு முதியவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.