டி.என்.ஏ. பரிசோதனை 
தமிழக செய்திகள்

குழந்தைகளை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் போராட்டம்- டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு

பணியில் அலட்சியமாக இருந்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கலைமதி, வித்யா ஆகியோருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்த நிலையில், செவிலியர்கள் தவறுதலாக குழந்தைகளை மாற்றி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலின விவரத்தில் முரண்பாடு காரணமாக உறவினர்கள் கடும் தகராறு செய்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இறுதியில் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உண்மை கண்டறிய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குப்பையன்பட்டியைச் சேர்ந்த கலைமதிக்கும், சென்னையாக்குடியை சேர்ந்த வித்யாவுக்கும் அடுத்தடுத்து குழந்தை பிறந்தது. 2 குழந்தைகளையும் அவர்களது உறவினர்களிடம் செவிலியர்கள் கொடுத்துள்ளனர்.

தகராறு

அதன்பிறகு, தவறுதலாக குழந்தையை மாற்றிக் கொடுத்துவிட்டதாக கூறி 2 குழந்தைகளையும் செவிலியர்கள் திரும்பி வாங்கினர். கலைமதிக்கு பிறந்தது பெண் குழந்தை என்றும், வித்யாவுக்கு பிறந்தது ஆண் குழந்தை என்றும் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்து 2 குழந்தைகளின் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் குழந்தைகளின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், டி.என்.ஏ. பரிசோதனை செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்று மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

மேலும் பணியில் அலட்சியமாக இருந்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT