தமிழக செய்திகள்

யார் கட்சி ஆரம்பித்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிடும்- ரகுபதி

ஒரு கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அப்படி ஒருவேளை கட்சி அழிந்தால், அது அந்த கட்சி தனது சொந்த தவறுகளால்தான் அழியும்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கொன்னையூரில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

தனித்து போட்டி

விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தனுஷ் தன்னிச்சையாக வந்து நற்பணி இயக்கம் தான் ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலமாக மக்களைச் சந்திக்கிறார். அதன்பிறகு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆனால், தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய தெம்பும் திராணியும் உள்ள ஒரே இயக்கம் இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான். எத்தனை கட்சிகள் வந்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்துதான் போட்டியிடும்.

ஒரு கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அப்படி ஒருவேளை கட்சி அழிந்தால், அது அந்த கட்சி தனது சொந்த தவறுகளால்தான் அழியும். எனவே, த.வெ.க.வினர் தங்களை யாரோ பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு மற்றவர்களை அழித்துவிட்டதாகக் கருதினால், அவர்கள் தான் அழிந்து போவார்களே தவிர மற்றவர்கள் அழிய மாட்டார்கள். விராலிமலை தொகுதி கடந்த 5 ஆண்டுகளில் இருண்டு போயிருந்ததாக அங்கு நடைபெற்ற விழாவில் அமைச்சர் முகமது பர்வேஸ் பேசி இருக்கிறார். விராலி மலை கோவிலில் ‘ஓம்' என்ற விளக்கு வெளிச்சத்தை தவிர வேறு எதையும் அ.தி.மு.க. ஆட்சியில் சி.விஜயபாஸ்கர் செய்யவில்லை. விராலிமலை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். நிதி ஆதாரத்தை பெருக்கி ஆட்சி நடத்தும் சிந்தனை ஆட்சியாளர்களிடம் இல்லை. அமைச்சர் செங்கோட்டையனைப் போல முன்னுக்குப்பின் முரணாக பேசும் பயந்தாங்கொலி அமைச்சர் யாருமில்லை. மேடையில் பேசியதை செய்தியாளர்களிடம் தைரியமாக சொல்லாமல் அவர் பின்வாங்குகிறார்.

செங்கோட்டையன் மீது தாக்கு

விராலிமலை தொகுதி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அத்தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர் தான் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கூட்டத்தைப் பார்த்தவுடன் பேசுவதும், பார்க்காதபோது மாற்றி பேசுவதும் அவரது வழக்கம். அவருடைய பேச்சுக்கு தமிழக மக்களிடையே எந்த மரியாதையும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT