தமிழக செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர்- டிரைவர் கடத்தல்: வக்கீல் உள்பட 9 பேர் கும்பல் கைது

கைது செய்யப்பட்ட 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை கிழக்கு வலசு பகுதியில் மர்மநபர்கள் சிலர் கோபாலகிருஷ்ணனின் காரை வழிமறித்தனர். பின்னர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது டிரைவர் அஜ்மல்லை கடத்திச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பங்காரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 62). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகளின் படிப்பிற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ந் தேதி சென்னையில் இருந்து ராசிபுரத்திற்கு காரில் வந்தார்.

கடத்தல்

அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை கிழக்கு வலசு பகுதியில் மர்மநபர்கள் சிலர் கோபாலகிருஷ்ணனின் காரை வழிமறித்தனர். பின்னர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது டிரைவர் அஜ்மல்லை கடத்திச் சென்றனர். பின்னர் இருவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள நிலத்தின் மூலபத்திரம், ரூ.1 கோடி பணம் கேட்டு சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து 6-ந் தேதி இரவு ரியல் எஸ்டேட் அதிபர் கோபாலகிருஷ்ணன், டிரைவர் அஜ்மல் ஆகியோர் மர்மநபர்களின் பிடியில் இருந்து தப்பித்தனர். பின்னர் அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். மேலும் கோபாலகிருஷ்ணன் இது குறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வக்கீல் சுந்தர்ராஜன்

பணம் தராமல் இழுத்தடிப்பு

அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சியில் ஒரு நிலம் வாங்குவதற்காக ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த மற்றொரு ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ‌அசோக்குமார் (47), என்பவரிடம் ரூ.70 லட்சம் வாங்கியதும், பின்னர் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சின்னசேலம் அடுத்த பொக்கியத்தை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா வெங்கடேஷன் என்பவரது மனைவி மோகனப்பிரியாவின் பெயரில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை எழுதி வைத்ததோடு, மோகனப்பிரியாவை புதுச்சேரியில் முபாரக் என்பவரின் கட்டுப்பாட்டில்‌ கோபால கிருஷ்ணன் வைத்திருந்தததும் தெரிந்தது.

இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்‌ கோபாலகிருஷ்ணனை கடத்திட திட்டமிட்டு நாமகிரிப்பேட்டையை அடுத்த பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த வக்கீல் சுந்தரராஜன் (48) என்பவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

9 பேர் கும்பல் கைது

இதில்‌ ரூ.2½ லட்சத்தை மல்லூர், மூக்குத்திப்பாளையத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தனபால்(48) தலைமையிலான கும்பலிடம் கொடுத்து, வக்கீல் சுந்தரராஜன் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி நிலப்பத்திரம், ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியதும் மேலும் கோபாலகிருஷ்ணனின் நண்பர் முபாரக்கின் கட்டுப்பாட்டில் உள்ள மோகனப்பிரியாவை விடுவிக்குமாறு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து அசோக்குமார், வெங்கடேஷன், வக்கீல் சுந்தரராஜன், தனபால், மல்லூரை சேர்ந்த வெங்கடாசலம் (52), பூரண சந்திரன்(43), நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தப் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (49), கார்த்திகேயன்(40), ஜெகன் (32) உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள், 4 செல்போன்கள், ஸ்கூட்டர் மற்றும் ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யா, கவுதம், விமல்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT