அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் விஜய் இரண்டரை ஆண்டுகளிலே கட்சியை தொடங்கி மக்களின் நம்பிக்கை பெற்று 35 சதவீதம் வாக்குகளை பெற்று விட்டார் என்று பாராட்டு மழை ஒரு புறத்தில் இருந்தாலும், அந்த 35 சதவீத வாக்காளர் சதவீதத்தை ஆதரவு தருகிற நிலையை மட்டும் பார்க்கிற நாம் மறுபுறத்தில் 65 சதவீதம் வாக்காளர்கள் அவரை எதிர்த்து வாக்களித்து இருக்கிறார்கள்.
இந்த புள்ளி விவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டாமா? ஆகா பேஸ், பேஸ் என்ற விளம்பரத்தை போல த.வெ.க.வில் சேர வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் விஜய்யை மட்டும் யாரும் பார்க்க முடியாது. இந்த ஜனநாயகத்தில் இது போன்ற ஒரு துர்பாக்கிய நிலையை பார்த்ததுண்டா?
விஜய் பெற்ற வெற்றியை சினிமா கவர்ச்சி என்று சொல்வதா? வசீகரம் என்று சொல்வதா? அல்லது நிழலை நிஜம் என்று நம்புகிற 35 சதவீத வாக்காளர்களிடம் அந்த வசீகரமும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை எப்போது நாம் புரிய வைக்க போகிறோம்.
வசீகரத்தால் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால் விவசாயிகளின் பயிர் கடன் திட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்குவதில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில், போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் விஜய் அரசு தோல்வி அடைந்து உள்ளது. இந்த அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்ட களமாக இருக்கிறது.
முதல்வர் விஜய் சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. ஆகவே சனிக்கிழமை தோறும் ஆள் பிடிக்கிற வேலையை இறங்கி உள்ளார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூண்டிலில் புழுவை வைத்து மீனை பிடிப்பதை போல ஆள் பிடிக்கிறார்கள். அது மீனை வாழவைக்க அல்ல, மீனை சாப்பிடதான்.
இதை அ.தி.மு.க. விசுவாச தொண்டர்கள் புரிந்து கொண்டால் சனிக்கிழமை தோறும் நடைபெறுகிற ஆள் பிடிக்கிற இந்த அசிங்கம் தமிழக அரசியலில் இருந்து நீங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.