முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரம் இப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து புதிய அரசு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை என்பது தான் நிதர்சனமான நிலவரமாக இருக்கிறது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம், கைகலப்பு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் கூட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கடையிலே விற்பனையாளரை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருப்பதை முதல்வர் விஜய் பார்த்திருப்பார்கள் .
நமக்கு ஞாபகத்துக்கு வருவது தேர்தலுக்கு முன்பு கரூரில் பிரசாரத்திற்கு சென்றிருந்த விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாட்டு பாடினார்.
தமிழ்நாட்டிலே தவெக ஆட்சி அமைந்ததும் 717 மதுக்கடைகள் மூடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த கடைகள் மூடியதால் ரூ.11 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு என்று கூறுகிறார்.
டாஸ்மாக் மதுபான கடைகளிலே தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற அட்ரா சிட்டிக்கு விஜய் தடை போடுவாரா?
பாட்டிலுக்கு 10 ரூபா என்று கரூரிலிருந்து விஜய் பாடிய பாட்டை அவர் மறந்திருந்தாலும் இன்றைக்கு தமிழகம் முழுவதும் நடைபெறுகிற அட்ராசிட்டியை பார்த்து பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று தமிழக மக்கள் பாடுவது விஜய் காதில் கேட்கிறதா? தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழித்து பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று விஜய் கூறியது இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. அது என்ன ஆனது.
பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு சிங்கப்பெண் படையை உருவாக்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடர்புடைய அந்த பாலியல் சம்பவத்தை முதல் வழக்காக பதிவு செய்வாரா?
ஆகவே பாட்டிலுக்கு 10 பாடல் என்று தேர்தலுக்கு முன்பு விஜய் பாடிய பாடலை தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடக்கிற இந்த அட்ராசிட்டிக்கு முடிவு கட்ட தமிழ்நாட்டு மக்களும் இதைபாடி கொண்டு இருக்கிறார்கள் .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.