இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரே ஒரு பவுர்ணமி மட்டுமே தோன்றும். ஆனால் அரிதாக ஒரே மாதத்தில் 2 பவுர்ணமிகள் தோன்றினால், அந்த 2-வது பவுர்ணமி நிலவே ‘’நீல நிலா’ எனப்படுகிறது.
சந்திரனின் ஒரு முழு சுழற்சி காலம் 29.5 நாட்களாகும். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நிகழ்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் பவுர்ணமி தோன்றியதால் இன்று 2-வது பவுர்ணமி சாத்தியமாகி உள்ளது.
‘நீல நிலா என்ற பெயரைக் கேட்டதும் நிலா நீல நிறத்தில் ஒளிரும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், உண்மையில் நிலா நீல நிறமாக மாறாது. இது வெறும் கால நேரத்தைக் குறிக்கும் ஒரு பெயரே தவிர, நிற மாற்றத்திற்கான பெயர் அல்ல என்கின்ற னர் விஞ்ஞானிகள். இன்று தோன்றும் இந்த புளூ மூன் நிலவானது எப்போதும் போலத் தனது வழக்கமான முத்து வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில்தான் பிரகாசமாக காட்சியளிக்கும்.
இந்த அரிய நீல நிலா நிகழ்வை இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் எவ்வித அதிநவீன உபகரணங்களும் இன்றி தங்களது வெறும் கண்களாலேயே மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். இன்று மாலை நேரத்தில் நிலா முழுமையாகத் தெரியும்.
இந்த நீல நிலாவின்போது சந்திரன் தனது நீள்வட்டப் பாதையில் பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் அபூர்வப் புள்ளியான ‘அபோஜி’ நிலையை அடைகிறது. இதனால் நீல நிலா இந்த 2026-ம் ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக ‘மைக்ரோமூன்’ என்று வானியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இது சாதாரண பவுர்ணமி நிலவை விட சுமார் 5.5 சதவீதம் சிறியதாகவும், 10.5 சதவீதம் குறைவான வெளிச்சம் கொண்டதாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்ணிற்கு இந்த மாற்றம் பெரிதாகத் தெரியாது.
இத்தகைய காலண்டர் அடிப்படையிலான நீல நிலா நிகழ்வுகள் சராசரியாக 2½ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றுவதால், வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு மிக முக்கிய நாளாகும்.
இதற்கு முன்பு 2018, 2020 அக்டோபர் 21-ந் தேதியிலும், 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் நீல நிலா தென்பட்டது. இதற்குப் பிறகு, அடுத்த நீல நிலா நிகழ்வு 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அன்றும், அதைத் தொடர்ந்து 2029-லும் தான் நிகழும் என்கிறார்கள் அறிஞர்கள்.