தமிழக செய்திகள்

ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்ல தடை

தமிழகத்தில் சூப்பர் எல் நினோ காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப தாக்குதல் இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்தநிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் நேற்று முதல் அதிகமாக இருந்து வருகிறது. இது இன்று உயர்ந்து 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியாக தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று காலை கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

வேலையிழப்பு

இதையடுத்து பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பருவநிலை மாற்றம், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிப்பு, விரட்டியடிப்பு, வேலை நிறுத்த போராட்டம், தற்போது சூறாவளி காற்றால் கடலுக்கு செல்ல தடை போன்ற காரணங்களால் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடியில் தவித்து வருகிறார்கள். இந்த மீன்பிடி தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.