ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே கைது செய்தது.
இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 9 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படை கைதுசெய்த மீனவர்களை மத்திய அரசும், மாநில அரசும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் பிரச்சனை குறித்து முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து இனி வரும் காலங்களில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மீனவர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ராமேசுவரத்தில் இன்று ஒருநாள் மீனவர்கள் அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிகளவில் நடைபெறும். ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரத்தில் மீன்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.