தமிழக முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து தேவிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது ராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியதில் தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தலைமைக் காவலர் எம். மகேஷ்குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
எம்.மகேஷ்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.