பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “இந்த வழக்கு தந்தை - மகனுக்கு இடையே உள்ள பிரச்சினை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று வாதிப்பட்டது.
மேலும் அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாமக என்ற பெயரில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டது. 2 ஆண்டுகள் எந்த அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வந்ததோ? அந்த முகவரிக்குத்தான் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மார்ச் 26-க்குள் முடிவெடுக்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.