தமிழக செய்திகள்

ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்

மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் (Consumer Price Index) அடிப்படையில் பார்க்கும்போது, 2013 முதல் 2026 வரை பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தானி (ஆட்டோ ரிக்ஷா) களுக்கான கட்டணம் கடைசியாக 2013-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ஆரம்ப 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25, அதன்பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி. எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100-ஐ தாண்டி உயர்ந்துள்ளது. அதேபோல் சி.என்.ஜி. எரிபொருள் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

எரிபொருள் செலவுகள் மட்டுமின்றி வாகன உதிரிபாகங்கள், டயர்கள், இன்சூரன்ஸ், பராமரிப்பு செலவுகள், தகுதி புதுப்பித்தல் (Fitness Certificate), அனுமதி கட்டணங்கள், தொழிலாளர் செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் கடந்த 13 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதன் விளைவாக ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் (Consumer Price Index) அடிப்படையில் பார்க்கும்போது, 2013 முதல் 2026 வரை பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி 2013-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.25 என்ற ஆரம்ப கட்டணம் இன்று குறைந்தபட்சம் ரூ.40 முதல் ரூ.45 ஆகவும், கிலோமீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணம் ரூ.18 முதல் ரூ.20 ஆகவும் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எனினும், பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படாத வகையில் கட்டண உயர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஆரம்ப கட்டணத்தை ரூ.40 ஆகவும், அதன்பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18 ஆகவும் நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். மேலும், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் கட்டணத்தை தானாக மறுஆய்வு செய்யும் நடைமுறையையும் ஏற்படுத்த வேண்டும்.

தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் பயணச் செலவையும் சமநிலைப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை, ஆட்டோ தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு உடனடியாக அமைத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

எனவே, தற்போதைய பொருளாதார சூழ்நிலை, எரிபொருள் விலை உயர்வு, வாகன பராமரிப்பு செலவுகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதார நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை உடனடியாக மறுஆய்வு செய்து நியாயமான அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.