தமிழக செய்திகள்

ராஜ்யசபா இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்- வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் விஜய் தீவிரம்

எம்பி பதவிக்கு ஜூன் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து தமிழ் நாட்டின் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பதவிக்கு ஜூன் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 8-ந் தேதி வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். 9-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக எம்.எல்.ஏ.க்களுடன் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் இந்த ராஜ்யசபா எம்.பி. பதவியை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றும் நிலையுள்ளது.

சட்டமன்றத்தில் த.வெ.க. பெற்றுள்ள பலத்தின் அடிப்படையில், இந்த தேர்தலில் த.வெ.க. எளிதாக வெற்றி பெற்று தனது முதல் எம்.பி.யை டெல்லிக்கு அனுப்ப முடியும்.

இதனால் கட்சியின் முதல் எம்.பி.யை தேர்வு செய்ய முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் மற்றும் கூட்டணி வட்டாரங்களில் பல மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இறுதி வேட்பாளரை முதலமைச்சர் விஜய் தான் முடிவு செய்யவுள்ளார்.