அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் விஜய் செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பினார்கள், பதாகைகள் வைத்தார்கள், முதல்வரை இழிவுபடுத்திச் சில இடங்களில் பேசினார்கள்.
ஆனால் தாயுள்ளம் கொண்ட தலைவன், தாயுள்ளத்தோடு தன் மீது எந்த வசவாளர்கள் வசைபாடினார்களோ 'வாழ்க வசவாளர்கள்' என்று அண்ணா வழியில், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.
மாணவர்களுடன் தானும் இருக்கிறேன் என்பதைத்தான் தலைவர் இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு முதல்வருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி.
பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திரையில் மட்டுமே நடிக்கக்கூடியவர் எங்கள் தலைவர் விஜய்.
அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. ஒரு வலைத்தளத்தில் கூட சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அது முழுக்க முழுக்க தற்போது இருக்கக்கூடிய கள நிலவரத்தை உள்வாங்காமல் அதை வெளியிட்டிருந்தார்கள்.
உண்மை என்னவென்றால், முன்பு இருந்த ஆட்சி பெரியதாக எந்த தொழில் முதலீட்டையுமே ஈர்க்கவில்லை.
ஆனால், அமைச்சர் கீர்த்தனா அவர்களின் தலைமையில் துறை முதல் மூன்று மாதங்களிலேயே, மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளார். அவர்கள் முதல் 6 மாதத்தில் தொட்டதை கீர்த்தனா 50 நாட்களில் முடித்திருக்கிறார்.
ஒரு பெண், ஒரு மாண்புமிகு அமைச்சர், ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது. அவர் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார.
இவ்வாறு அவர் கூறினார்.