தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து உள்ளார்.
தமிழ் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு தனி கட்சி தொடங்கி விஜய் ஆட்சியை பிடித்து இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திரை உலகில் இருந்து வந்து அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் சாதித்து காட்டி இருந்தனர். அதன் பின்னர் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனாலும் முதலமைச்சர் நாற்காலியை அவரால் எட்டிபிடிக்க முடியவில்லை.
கமல்ஹாசன் உள்பட நடிகர்கள் பலர் அரசியல் களம் கண்ட போதிலும் அவர்களால் வெற்றியை பெற முடியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.
ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்தை ரஜினிகாந்த் முழுமையாக தவிர்த்து விட்டு ஒதுங்கி கொண்டார்.
இந்த நிலையில்தான் விஜய் அரசியலில் அதிரடியாக குதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த மு.க. ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஜய் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கடும் இழுபறி நீடித்து வந்தது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க போவதா கவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் வகையில் ரஜினிகாந்த் செயல்படுவதாக ஒரு சிலர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்கள். சமூகவலைதளங்களிலும் ரஜினிகாந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் விஜய் வெற்றி பெற்றதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது போன்ற கருத்துக்களும் பகிரப்பட்டன.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் மீது சுமத்தப்பட்டு வரும் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது நிருபர்கள் சரமாரியாக அவரிடம் விஜய் தொடர்பாகவும், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சித்தீர்களா? என்பது பற்றியும் கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து ரஜினிகாந்த் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதற்கு நான் விடை கொடுக்காவிட்டால் அது உண்மையாகி விடும்.
சமீபத்தில் கூட நான் பெங்களூரு சென்று வந்தேன். கேரளாவுக்கும் சென்றேன். அப்போது இது தொடர்பான விமர்சனங்களுக்கு பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளிக்க நினைத்தேன். ஆனால் பத்திரிகையாளர்கள் அங்கு வராததால் நான் விளக்கம் அளிக்க முடியவில்லை. இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை இப்போது அளிக்கிறேன்.
தேர்தல் முடிவு வந்தவுடன் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அது பெரும் விமர்சனம் ஆகிவிட்டது. மு.க.ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நண்பர் எங்களது நட்பு, கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். இருந்தாலும் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் நட்பு அடிப்படையில் அவரை சென்று சந்தித்தேன்.
உடனே விஜய் முதலமைச்சராக கூடாது. அதை தடுக்க தான் ரஜினி, மு.க.ஸ்டாலினை சந்தித்தார், வேறு இரண்டு பெரிய கட்சிகளை இணைக்கவும் திட்டமிடுகிறார் என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். இது போன்ற சூழ்நிலையில் இப்படி எல்லாம் பேச முடியுமா அப்படி பேசும் அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் கிடையாது. அதை தற்போது தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
அப்புறம் விமான நிலையத்தில் விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு அவருக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள். விஜய் முதலமைச்சரான உடனே எனது எக்ஸ்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். 2016-ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று நான் சொன்னது முதல் விமான நிலையத்திற்கு சென்றால் மீடியா இருக்கிறார்களா என்று கேட்டு வைத்துக் கொள்வேன்.
அப்படித்தான் இந்த முறையும் கேட்டு சென்றேன். ஆனால் மீடியா யாரும் வரவில்லை என்று சொன்னார்கள் அந்த சமயம் செல்போனில் வீடியோ எடுத்தபடி ஒருவர் என்னிடம் வந்து, ‘விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டாரே’ என்று கேட்கிறார்.
எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அவரைப் பார்த்தால் மீடியா மாதிரி தெரியவில்லை. நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள்.
விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் பேசுகிறார்கள். நான் அரசியலில் இல்லை. அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியலில் நான் இல்லாதபோது விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.
எனக்கும், விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன்.
என்னுடன் விஜய்யை ஒப்பிடுவது சரியாகாது. அதேபோல் அவருடன் என்னை ஒப்பிடுவதும் சரியாக இருக்காது. சிறிய வயதில் இருந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் முதலமைச்சராவதில் எனக்கு ஏன் பொறாமை. அரசியலில் சிறிய வயதில் அதாவது 52 வயதில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல சாதனை படைத்திருக்கிறார். மத்திய மாநில அரசுகளை தாண்டி தனி ஆளாக சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் ஜெயித்திருக்கிறார்.
இதில் எனக்கு என்ன பொறாமை இருக்கப் போகிறது. இது சந்தோஷம் கலந்த ஆச்சரியம் தான். எனவே எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நிறைய எதிர்பார்ப்புகள் தான் இருக்கிறது அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாற்றம் தேவை என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள். விஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன்.
இதுவரை முதலமைச்சர் பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவர் விருப்பப்பட்டு அழைத்ததின் பெயரில் தான் நான் அந்த விழாவுக்கு சென்றேனே தவிர அழைப்பிதழ் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.