தமிழக செய்திகள்

மீஞ்சூர் அருகே 100 வீடுகளை சூழ்ந்த மழைநீர்

மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் சுமார் 200 ஏக்கர் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

2 நாட்களாக மழை பெய்த நிலையின் காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதி, கிழக்கு பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பருவமழை காலங்களில் கொண்டக்கரை சுப்பா ரெட்டிபாளையம். மேலூர், வல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வந்து தேங்கி அங்கிருந்து ரெயில்வே கல்வெட்டை தாண்டி கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

மழை நீர்

அவ்வாறு செல்லும் மழை நீர் செல்ல முடியாமல் தாங்கல் பகுதி ஆக்கிரமிப்பு மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ரெயில்வே கல்வெட்டு சிறியதாக இருப்பதால் செல்ல முடியாமலும் மேலும் எண்ணூர் கடல் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால் பக்கிங்காம். கால்வாய் வழியாக செல்லும் மழை நீர் செல்ல முடியாமல் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் புகுந்து விடுகிறது. இதனால் வருடம் தோறும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக பாதிக்கப்படும் இடமாக அத்திப்பட்டு புதுநகர் காணப்படுகிறது.

தண்ணீர் தேங்கி நிற்கிறது

இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்த நிலையின் காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர்.அப்பகு தியில் உள்ள சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும் போது, வருடம் தோறும் மழைக்காலங்களில் இப்பகுதி முழுவதும் வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி விடுகிறது. அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதி பள்ளத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள், வருவாய்த் துறையினர் தற்காலிக நடவடிக்கை மட்டும் எடுத்து சென்று விடுகிறார்கள். தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். ரெயில்வே கல்வெட்டை பெரிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்றனர்.

வயல்களில் தண்ணீர்

தொடர்மழையின் காரணமாக பொன்னேரி மடிமை கண்டிகை, ஆலாடு, தடப்பெரும்பாக்கம், கோளூர், ஏலியம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் பொன்னேரி அடுத்த ஆலாடு, கேஎன் கண்டிகை, பி.என்.கண்டிகை, பகுதியில் மழைநீர் கால்வாய். தனிநபர் ஆக்கிரமிப்பினால் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் சுமார் 200 ஏக்கர் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விவசாயம்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நெற்பயிர்கள் பாதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது நெற்பயிர் மூழ்கி உள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் கல்வெட்டு அமைக்காமல் சாலையின் மட்டம் உயர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வடகிழக்கு பருவமழை

இந்த நிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் நெற்பயிர் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் வயலில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வடிக்க வேண்டும், வடகிழக்கு பருவமழையில் அதிகமாக ஓடும் நீரினை பண்ணை குட்டைகள் மூலம் சேமித்து நிலத்தின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

SCROLL FOR NEXT