கனமழையால் அங்குள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பளத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
இரவில் விழுப்புரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர். இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
இந்த மழைக்கு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனை தொடர்ந்து அங்கு நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மின் மோட்டார்கள் உதவியுடன் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டி வருகிறது. இந்த மழை காரணமாக மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 மீனவ கிராம மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கனமழையால் அங்குள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பளத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
கடலூர்மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் வெயிலின்றி வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
நள்ளிரவில் கடலூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நள்ளிரவில் தொடங்கி விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் உள்ள பல முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விருத்தசாலம், நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு முதலே இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
விடிய, விடிய பெய்த கனமழைக்கு விருத்தாசலம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை மழை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்ருட்டி பகுதியில் கனமழைக்கு வீடு ஒன்று இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், பகண்டை கூட்டு ரோடு, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.