தமிழக செய்திகள்

கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வெட்டவெளியில் இறந்தவர் உடல் எரிப்பு- தகனமேடை இல்லாததால் அவலம்

உடலை தகனம் செய்வது உள்ளிட்ட இறுதி சடங்குகளை அவர்கள் மேற்கொண்டனர். இதற்கிடையே தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி சிங்கம்புணரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

சுடுகாட்டில் இறந்தவர்களை எரிப்பதற்கு முறையான தகனமேடை இல்லாததால் சுடுகாட்டில் வெட்டவெளியில் எரிக்கும் அவலநிலை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஐநூத்திபட்டி கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அரசின் ஒத்தழைப்பு

பல்வேறு வரி வருவாய் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு ஒத்துழைக்கும் இந்த கிராமத்தின் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் அரசின் ஒத்தழைப்பு துளியும் இல்லை என்று கிராமத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் முக்கிய பிரச்சினையாக இருந்து வருவது சுடுகாட்டிற்கு கட்டிடம் இல்லாததுதான். இந்த கிராமத்தில் சுடுகாட்டில் இறந்தவர்களை எரிப்பதற்கு முறையான தகனமேடை இல்லாததால் சுடுகாட்டில் வெட்டவெளியில் எரிக்கும் அவலநிலை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

தேர்தல்

ஒவ்வொரு தேர்தல் மற்றும் கட்சி தலைவர்கள் வருகையின்போது கிராமமக்கள் சார்பில் முக்கிய கோரிக்கைகளில் இந்த சுடுகாடு கட்டிடம் முதன்மையாக இருந்தது. அதன்பேரில் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்புடன் நின்று விடுகிறதே தவிர தற்போது வரை பழைய நிலையே தொடர்கிறது.

விபத்து

இந்தநிலையில் ஐநூத்திபட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் மரணம் அடைந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து உடலை தகனம் செய்வது உள்ளிட்ட இறுதி சடங்குகளை அவர்கள் மேற்கொண்டனர். இதற்கிடையே தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி சிங்கம்புணரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வேறு வழியின்றி நனைந்து கொண்டே இறந்த ராமச்சந்திரன் உடலை சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர்.

வீடியோ வைரல்

அவரது உடலை சுடுகாட்டில் வெட்டவெளியில் வைத்து எரித்த போது திடீரென கனமழை பெய்தது. சுடுகாட்டில் தகனமேடை கட்டிடம் இல்லாததால் மழையில் நனைந்து கொண்டே தார்ப்பாயை மூடிக்கொண்டு உடலை எரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இனிமேலாவது ஐநூத்திபட்டி கிராமத்தில் தகனமேடை கட்டிடம் கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வைரலான அந்த வீடியோவில் கூறுகையில்,

இந்த கிராமத்தோட தகனமேடை எப்படி இருக்கு பாருங்க, சிறப்பா இருக்கா? நல்லா இருக்கா? இதுக்கு முன்னாடி இருந்தவங்களும் சரியில்லை, இப்ப இருக்கிறவங்களும் சரியில்லை என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT