தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூழ்ந்த மழை வெள்ளம்

மழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

மழையால் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் தியாகதுருகம் அருகே விருகாவூர் பகுதியில் 21.5 செ.மீ மழை பெய்தது.

கனமழை

இதையொட்டி விருகாவூர் வயல்வெளி பகுதியில் இருந்து மழைநீர் ஓடையின் வழியாக உடையார் குளத்திற்கு வந்தடைந்தது. இந்த குளத்திலும், தண்ணீர் வெளியேறும் பகுதியிலும் புதர்கள் மண்டி இருந்தது. இதனால் தண்ணீர் அருகே இருந்த காமராஜர் தெரு பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.

இதில், அந்தப் பகுதியில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் மழை நீரில் நனைந்து போனது. வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரத்தின் மூலம் வெளியேற்றினர்.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஆடுகள்

இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மனைவி பாஞ்சாலை(48) என்பவர் வளர்த்து வந்த 3 ஆட்டுக் குட்டிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் இரவு 7 மணியில் இருந்து 12 மணி வரை தெருவில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழைநீர் மெயின் ரோடு வழியாக கோமுகி ஆற்றை சென்றடைந்தது. தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முருகன், ஒன்றிய பொறியாளர் சாமிதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடையார் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் கால்வாய் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற அறிவுறுத்தினர். அதன்படி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.

குளம் போல் தேங்கியது

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இந்த குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேபோல் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியது. அப்போது கிராம நிர்வாக அலுவலர் மணிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்திலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாராயணபுரம், புதுப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

இந்த மழை காரணமாக வானூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நூலக கட்டிடத்தை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தற்போது அங்கு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT