தூத்துக்குடி முழுவதும் நேற்று பகலில் தொடங்கி இரவிலும், இன்று காலையில் 2-வது நாளாக தொடர்ந்து சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பல்வேறு பகுதிகள் மற்றும் வடிகால் அமைக்கப்படாத திருச்செந்தூர் பிரதான சாலைகளில் ஆறு போல் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
கடும் கோடையின் காரணமாக தண்ணீர் இன்றி தவித்த தூத்துக்குடி தாமிரபரணி ஆற்று நீர் வடகால் பாசனத்தில் உள்ள பேய்குளம்,பெட்டை குளம், கோரம்பள்ளம் குளம் பகுதிகளில் இருந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து இருந்த நிலையில் இந்த திடீர் மழையால் பயன் அடைந்து உள்ளது, பல ஆயிரம் ஏக்கரில் இருந்த வாழைகளுக்கு தண்ணீர் தேவையை நிறைவேற்றி உள்ளதாகவும், மேலும் சிறிதளவு பெய்துள்ள இந்த மழையால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் செலவு மிச்சமாகி உள்ளது, உளுந்து பயிரிட்டு அறுவடையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் வேளாண்மை துறையால் பாராட்டப்பட்ட விவசாயி இளங்கோவன் தெரிவித்தார்.
மழையால் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உள்ள முத்தையாபுரம் முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவழி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தி பணிகள் ஒரு வாரத்துக்கு பின்னர் தான் தொடங்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். திடீர் மழையால் கடும் கோடையின் காரணமாக வெப்ப காற்று அலை வீசி வந்த நிலை மாறி தூத்துக்குடி பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது.