தமிழக செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 616 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

கடும் வெயில் காரணமாக பயிர்கள் வாடியிருந்த நிலையில் பெய்த மழையால் பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழை

இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், சங்ககிரி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விவசாயிகள்

மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பெய்த மழையை ெதாடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது . இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல ஏற்காட்டில் பெய்த மழையால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஏற்காட்டில் கடும் குளிருடன் பனிப்பொழிவும் நிலவிவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். இன்று காலையும் சேலம் மாவட்டத்தில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது.

203 மி.மீ. மழை

மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 46 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 5.2, ஏற்காடு 10.2, வாழப்பாடி 10.8, ஆனைமடுவு 13, ஆத்தூர் 6.3, தம்மம்பட்டி 28, ஏத்தாப்பூர் 21, கரியகோவில் 6, நத்தக்கரை 6, வீரகனூர் 4, சங்ககிரி 15, எடப்பாடி 8, மேட்டூர் 7.4, ஓமலூர் 14, டேனீஷ்பேட்டை 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 203 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் நகரம், எருமப்பட்டி, குமார பாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, கொல்லிமலை என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.

நாமக்கல் நகரில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

கடும் வெயில் காரணமாக பயிர்கள் வாடியிருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் அதிக பட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

எருமப்பட்டி-10, குமாரபாளையம்-38.20, மங்களபுரம்-11, மோகனூர்-52, புதுச்சத்திரம்-34, ராசிபுரம்-15, சேந்த மங்கலம்-19, திருச்செங்கோடு-14.40, கலெக்டர் அலுவலகம்-25, கொல்லிமலை செம்மேடு-35 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 413 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 616 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

SCROLL FOR NEXT