தமிழக செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை

காயல்பட்டினம், திருச்செந்தூர், குரும்பூர், ஏரல் சுற்றுவட்டாரத்தில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வியாபாரிகள் சோகம் அடைந்துள்ளனர். மாநகரில் நேற்றில் இருந்து இரவிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

களக்காடு

இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், ஜில்லென்ற காலநிலை நிலவி வருகிறது. மாநகரில் அதிகபட்சமாக பாளையில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, அம்பை, ராதாபுரம், களக்காடு சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. ராதாபுரத்தில் அதிகபட்ச மாக 18 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 11 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சாரல் மழையால் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளியலிட்டு வருகின்றனர்.

மழை

தென்காசி மாவட்டத்திலும் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சிவகிரியில் அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆய்குடி சுற்றுவட்டா ரத்திலும் பரவலாக மழை பெய்தது. கடனா, ராமநதி மற்றும் கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் 3 சென்டிமீட்டரும், கயத்தாறு மற்றும் காடல்குடி, வைப்பார் பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம் சுற்றுவட்டாரத்திலும் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காயல்பட்டினம், திருச்செந்தூர், குரும்பூர், ஏரல் சுற்றுவட்டாரத்தில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

SCROLL FOR NEXT