தமிழக செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.

'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் ஒன்

ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

சலுகை

ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் 6 மாதத்திற்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.

3 சதவீத தள்ளுபடி

இந்தநிலையில், இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெயில் ஒன் செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் ரெயில் ஒன் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம்.