தமிழக செய்திகள்

TN Assembly Election | நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல் காந்தி நாளை பிரசாரம்

ராகுல் காந்தி குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதாக பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களிலும் பிரசாரம் செய்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் நாளை (திங்கட்கிழமை) தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை 11 மணிக்கு ராகுல் காந்தி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.20 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வருகிறார். காலை 11.20 மணிக்கு குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து 12.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12.50 மணிக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி வருகிறார். நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமன ரூபி மனோகரன், அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரை, பாளையங்கோட்டை தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப், நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து 1.55 மணிக்கு மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு ராகுல்காந்தி 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரம் செல்கிறார். அங்கு 2.25 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன், திருச்செந்தூர் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமஜெயம், கோவில்பட்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் மாலை 3.20 மணிக்கு புறப்படும் ராகுல் காந்தி 3.35 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாங்குநேரியில் தேர்தல் பிரசாரம் நடைபெறும் இடத்தை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வேட்பாளர் ரூபி மனோகரனுடன் ஆலோசனை நடத்தினர்.

இதேபோல ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. நிரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் ராகுல்காந்தி தனி ஹெலிகாப்டர் மூலம் சாயர்புரத்திற்கு வந்து இறங்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் மைதானம், பொதுமக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் இடங்கள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.