தமிழக செய்திகள்

சென்னையில் 1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி - அதிகாரிகள் தகவல்

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒவ்வொரு நாயின் புகைப்படமும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னை மாநகரை உருவாக்கிடவும், அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (ரேபிஸ் தடுப்பூசி) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கப்பட்டது.

ரேபிஸ் தடுப்பூசி

இந்த முகாம்கள் மூலம் கடந்த மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 25-ந் தேதி வரை சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1,00,378 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் 41 வேலை நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 34 வேலை நாட்களுக்கு மண்டலங்கள் 9, 11, 13, 15 ஆகியவற்றில் செயல்படுத்தப்பட உள்ளது.

மொபைல் செயலி

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒவ்வொரு நாயின் புகைப்படமும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவும் தோராயமாக நாள் ஒன்றிற்கு சுமார் 100 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு 3 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT