தமிழக செய்திகள்

காவல்துறை மரணம் குறித்த கேள்வி - அமைச்சர் விஸ்வநாதனின் மௌன பதில்!

செல்வப்பெருந்தகை எந்த கட்சி என்றே தெரியவில்லை.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்.,

டெல்லி செல்லும் விஜய்?

“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தகம், உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிப் படித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள், திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற உள்ள, அந்த புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதற்காக அவர் டெல்லி செல்லக்கூடும் எனக் கருதுகிறேன்.

செல்வப்பெருந்தை எந்தக் கட்சி?

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் எந்தக் கட்சியின் சார்பில் பேசுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. முதலில் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்? அடுத்து எந்தக் கட்சியில் சேரப் போகிறார்? என்பதை சொல்லட்டும். அதன்பின்பு அவர் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கிறேன்.

தமிழகத்தில் பெண்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், பெண்களைச் சகோதரிகளாகப் பாவித்து, அவர்களின் பாதுகாப்புக்கும் உரிய மரியாதைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்குத் துணையாகவும் அரசு செயல்படும்.

உயர்கல்வி நிலையங்களில் போதைப் பொருட்கள் மாணவர்களிடையே நடமாடுகிறதா என்பதை, சோதனை செய்து கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறைக்கு பொதுவாக ஒரு சர்குலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரிகள் மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகில், போலீசார் ஆய்வு மேற்கொள்வது காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமான நடவடிக்கைதான்.

மாணவர்கள் மது அருந்தக் கூடாது என்பது அரசின் உத்தரவு. அந்த உத்தரவு மீறப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

சிரிப்பு

தொடர்ந்து காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர் (லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன்) உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்காமல், சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT