புழல் காவாங்கரை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது25). எலக்ட்ரீசியனாகவும், பெயிண்டிங் வேலையும் பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் வீட்டின் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ்குமார் போதை ஊசி பயன்படுத்தியதால் மரணம் அடைந்திருப்பது தெரிந்தது. இந்த விவகாரத்தில் கதிர்வேடு பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாவை போலீசார் கைது செய்தனர். போதை ஊசி விற்பனை செய்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.