இரண்டு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
விருதுநகரில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். விருதுநகரைச் சேர்ந்த ராஜவேல் என்பவருக்கு சொந்தமான பருப்பு மில், காமராஜர் பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மில்லுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியில் சில நபர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது பட்டாசில் இருந்து பறந்துவந்த தீப்பொறி, பருப்பு மில் அலுவலக அறைக்குப் பின்புறம் கிடந்த விறகு மற்றும் குப்பையில் விழுந்தது. உடனே தீ மளமளவென பற்றி தீப்பற்றியது. காய்ந்த குப்பைகளில் பற்றிய தீ, மளமளவென அலுவலக அறைக்குப் பரவியது.
இத்தீவிபத்தில் அலுவலக அறையும், அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்களும் தீயில் எரிந்து முற்றிலும் சாம்பலாயின. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் மில்லின் இதர பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இதனால் பெரும் தீ விபத்தில் இருந்து பருப்பு மில் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது. விடுமுறை நாள் என்பதால் மில்லில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியில் உள்ள நாட்டு மருந்துக்கடை குடோன் தீப்பிடித்து எறிந்தது. இரண்டு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.