தமிழக செய்திகள்

புலி பட விவகாரம் - முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டில் கொடுங்கையூரை சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

முதலமைச்சர் விஜய் வீட்டில், கடந்த 2015-ம் ஆண்டு சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்தனர். இதற்காக விஜய்க்கு, ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி 5-ந்தேதி தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ரூ.1½ கோடி அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, முதலமைச்சர் விஜய்க்கு எதிராக வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் கொடுங்கையூரை சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கு தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, ஆவணங்களை அமலாக்க இயக்குனரகத்துக்கு அனுப்ப உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்ப பெற அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.