புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. இவர் தமிழக வெற்றிக்கழக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதன் காரணமாக அவருடைய கட்சி பதவி பறிக்கப்பட்டு, வடக்கு மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார்.
புதிதாக பதவி ஏற்ற பழனிவேல், புதுக்கோட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அப்போது விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க போலீசார் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் அ.தி.மு.க. அலுவலக ஆவணங்களை சமர்ப்பித்து, அலுவலகத்தை திறக்க அனுமதி கோரினார்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலையில் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பங்கேற்றனர்.
ஆனால் விஜயபாஸ்கர் தரப்பில் ஒரு வக்கீல் மட்டுமே கலந்து கொண்டார். விஜயபாஸ்கர் தரப்பு ஆதரவாளர்கள் வராததால், சட்டப்பூர்வமாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
கோட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே திரண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள், அலுவலக சாவியை தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பினர் ஒப்படைத்தனர்.