தமிழக செய்திகள்

புதுக்கோட்டை பேருந்து விபத்து: பழங்குடியின மக்கள் என்பதால் அலட்சியம் என குற்றச்சாட்டு

இச்சம்பவத்தில் 8 மாணவிகள் பலத்த காயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள்

புதுக்கோட்டை அருகே திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல 8-ம் எண் அரசு நகர பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட ஆதி பழங்குடியின பள்ளி மாணவிகள் பயணித்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக நடத்துநர் ஒரு மாணவியை கீழே தள்ளவே அதை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் ஓடும் பேருந்தில் இருந்து கதவு திறந்து கீழே விழுந்துள்ளனர்.

காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

பேருந்தின் கதவு திறந்து 8 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகளின் கை, கால் மற்றும் தலை பகுதியில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்களும் பழங்குடியின மக்களும் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவிகள் பேருந்தில் பயணிக்கும் போது பழங்குடியின மக்கள் என்பதாலும் இலவச பயணம் என்பதாலும் சிலர் அலட்சியமாகவும் அவதூறாகவும் பேசுவதாக வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் கூறும்போது

இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளை அனுப்பி உள்ளேன். விசாரணை முடிவில் தவறு உறுதிசெய்யப்பட்டால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

கவன குறைவாக செயல்பட்ட ஓட்டுநர் , நடத்துநர் மீது நடவடிக்கை

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் , பழங்குடியின மாணவிகள் பேருந்தில் ஏறிய பின்பு ஓட்டுநர் அருகே உள்ள கதவை திறப்பதற்கான பட்டனை யாரோ ஒருவர் அழுத்தி விட்டதால் கதவு திறந்ததில் மாணவிகள் விழுந்துள்ளனர் எனவும், இதில்தான் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விவாகரத்தில் கவன குறைவாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக பொது மேலாளர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

பணியிடை நீக்கம் தீர்வாகாது, பயணத்திற்கான பாதுகாப்பு சூழலை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி மக்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் தங்கள் பகுதியில் உள்ள பிள்ளைகள் முதல் தலைமுறையாக பள்ளிக்கும் கல்லூரிக்கும் படிக்க வருகின்றனர். நடத்துநரை பணிநீக்கம் செய்வது மட்டும் தீர்வாகாது.

தங்களை சக மனிதர்களாக மதித்து தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக படிக்க செல்லக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.