தமிழக செய்திகள்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நீடிப்பு: ஓட்டல்களில் உணவு விலை அதிகரிப்பால் திண்டாடும் பொதுமக்கள்

சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியின் விலையும் ஓட்டல்களில் வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலையில் இருந்து ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்களை நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சிலிண்டர் வினியோகத்தை நிறுத்திய போதிலும் கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர்கள் தங்கு தடையின்றி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.2,200 மதிப்பிலான வணிக சிலிண்டர் ஆரம்பத்தில் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. அது பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது கள்ளச்சந்தையில் ரூ.8 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படி கூடுதல் விலைக்கு வணிக சிலிண்டர்களை வாங்கி ஓட்டல்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

சாலையோரம் உள்ள ஓட்டல்கள், சிறிய உணவகங்கள், பெரிய ஓட்டல்கள் என அனைத்து வகையான ஓட்டல்களிலுமே இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, பரோட்டா, கலவை சாதங்கள், பிரியாணி, சைவ மற்றும் அசைவ சாப்பாடு, பிரைடு ரைஸ் உள்ளிட்ட அனைத்து வகையான உணவுகளுமே ரூ.5-ல் இருந்து ரூ.30 வரையில் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

உதாரணத்துக்கு ரூ.20 ஆக இருந்த 2 இட்லி, ரூ.30 ஆகவும், ரூ.40 ஆக இருந்த தோசை ரூ.60 ஆகவும், ரூ.100 வரையில் விற்கப்பட்ட நெய் தோசை ரூ.130 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

ரூ.40 அல்லது ரூ.50 -க்கு விற்கப்பட்ட பொங்கல் ரூ.70 வரையிலும், ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு செட் பூரி ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியின் விலையும் ஓட்டல்களில் வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலையில் இருந்து ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.10-க்கு விற்பனையான பரோட்டா சில கடைகளில் ரூ.12.50 ஆகவும், மேலும் சில கடைகளில் ரூ.15 வரையிலும் அதிகரித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் மாலை நேரங்களில் ஓட்டல்களில் பிரைடு ரைஸ் அதிகளவில் விற்பனையாகும். ரூ.110-க்கு விற்பனையான சிக்கன் ரைஸ் ரூ.130-ல் இருந்து ரூ.150 வரை அதிகரித்துள்ளது. இப்படி ஓட்டல்களில் உணவு வகைகள் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருப்பதால் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.

தற்போது கோடை விடு முறை விடப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தோடு சுற்றுலா செல்பவர்கள் ஓட்டல்களில் உணவு விலை உயர்வால் கூடுதலாக செலவாகிறது என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சிறிய கடைகளில் காலை உணவை 8 பேர் சாப்பிட் டால் இதற்கு முன்னர் ரூ.600 வரையில் செலவானது என்றும், தற்போது உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.1000 வரையில் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குடும்ப தலைவர் ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுவே பெரிய ஓட்டல்கள் என்றால் 2 மடங்கு அளவுக்கு பணம் கொடுக்க வேண்டியது ஆகிவிடுகிறது.

இது தொடர்பாக அவர் கூறும்போது, கோடை காலத்தில் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 அல்லது 3 நாட்கள் தங்க வேண்டும் என்றால் அத்தனை நாட்களுக்கும் சமைத்து எடுத்து செல்ல முடியாது. இதனால் ஓட்டல்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய நிலையே ஏற்படும். அப்படி 2 அல்லது 3 நாட்கள் ஓட்டல்களில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் 4 பேர் சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு மட்டுமே குறைந்தது ரூ.3 ஆயிரத்திற்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசு வணிக சிலிண்டர்களின் வினியோகத்தை சீராக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.